பள்ளி போகும் வழியில்
பல்லில்லா பாட்டியிடம்
பனங்கிழங்கு வாங்கி தந்ததும்....
விடுமுறை தினங்களில்
கூட்டாஞ்சோறு பொங்கி
விளையாட்டாய் விருந்துண்டதும்...
சைக்கிள் சொல்லி தருவதாய்
சத்தியம் செய்து எனை
சேத்தில் விழ வைத்ததும்....
பத்தாம் வகுப்பு தேர்வுக்கு
பக்கம் பக்கம் அமர்ந்து
விடிய விடிய படித்ததும்....
கல்லூரி சேர்ந்தபின்
'என் உயிர் தோழன்' நீயென
அறிமுகம் செய்ததும்....
அரைக்காசு இல்லா நேரத்திலும்
'அதற்கென்ன விடு' என்று
ஆனந்தமாய் அலைந்ததும்....
பதிந்து போனது
பாவை மனதில்
பசுமரத்து ஆணி போல்....
மறந்து போகாது
மடியா நட்பு
மழையில் உப்பைப் போல்...
பட்டாம்பூச்சியாய்
நட்பு வளர்த்த நாட்களெல்லாம்
மட்கிப் போய் மறைந்துவிடுமோ
மணமாகிப் போன பின்....?
துள்ளி திரிந்த காலமெல்லாம் - ஒரு
துயரின்றி தொடராதோ...
அள்ளி அணைத்த நட்பு - நம்
ஆயுள் முழுதும் நீளாதோ....
புள்ளி வைத்து முடித்தாலும் - அது
தொடர்ச்சிப்புள்ளி ஆகாதோ....
No comments:
Post a Comment